2018-ம் ஆண்டு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சுட்டுக் கொலை
புதுடெல்லி: காஷ்மீரில் உள்ள சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர், 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் அமிர் ஹம்சா. இவர் பாகிஸ்தான் உளவுப்பிரிவு (ஐஎஸ்ஐ) நடவடிக்கைகளை திட்டமிடும் பிரிவில் பணியாற்றினார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர் எமர்ஜென்சி சர்வீசஸ் அகாடமியின் தலைமை இயக்குனராக பணியாற்றினார்.
இந்நிலையில் இவர் பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் உள்ள ஜீலம் மாவட்டத்துக்கு, கடந்த திங்கள்கிழமை காரில் சென்றார். உடன் அவரது மனைவியும், மகளும் இருந்தனர். அமிர் ஹம்சாவின் சகோதரர் அயுப் என்பவர் அவர்களின் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லீலா இன்டர்சேன்ஜ் என்ற இடத்தில் அமிர் ஹம்சாவின் காரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் நெருங்கினர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் அமிர் ஹம்சா மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமிர் ஹம்சா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் குண்டு காயம் அடைந்தனர். அமிர் ஹம்சா இறந்ததை உறுதி செய்த பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக